திருக்கோவிலூரில் அரசு கலைக்கல்லூரி வரும் கல்வியாண்டு முதல் செயல்படும்
திருக்கோவிலூரில் அரசு கலைக்கல்லூரி வரும் கல்வியாண்டு முதல் செயல்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்குவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இ்ந்த நிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திருக்கோவிலூருக்கு வருகை தந்து அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்படும் வகையில் சங்கராபுரம் சாலையில் தற்காலிக இடம் தேர்வு செய்யும் பணியையும், சந்தப்பேட்டை கள்ளக்குறிச்சி சாலையில் நிரந்தரமாக அரசு கலைக்கல்லூரி அமையும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கலைக்கல்லூரி அமைப்பது குறித்து தாசில்தார் குமரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், வரும் கல்வியாண்டு முதல் திருக்கோவிலூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கும் வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது எனவும், விரைவில் அதற்கான பணிகள் முடிந்து கல்லூரியில் மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் தொடங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். அப்போது, புகழேந்தி எம்.எல்.ஏ., திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வக்கீல் எம் தங்கம், நகர்மன்ற துணைத்தலைவர் உமாமகேஸ்வரிகுணா, திருக்கோவிலூர் நகர தி.மு.க. செயலாளர் ஆர்.கோபி என்கிற கோபி கிருஷ்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சக்திவேல் பிரகாஷ் துரைராஜன், தொ.மு.ச. நிர்வாகிகள் சண்முகம், டி.கே. சரவணன், வக்கீல் மருதுசேஷன் உள்பட பலர் உடனிருந்தனர்.