விபத்தில் போலீஸ் அதிகாரி மகன் பலி
மும்பையில் விபத்தில் போலீஸ் அதிகாரி மகன் பலியானார்
மும்பை,
மும்பை கொலாபாவை சேர்ந்தவர் நிகில் (வயது 23). இவரது தந்தை மும்பையில் போலீஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். சம்பவத்தன்று மாலை 5.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் நிகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சாலையின் வலது புறம் வாகனம் திருப்ப தடை செய்யப்பட்டு இருந்த நிலையில், அவர் மோட்டார் சைக்கிளை அந்த வழியாக திருப்பி உள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிகில் படுகாயமடைந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த அங்குவந்த போலீசார், படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நிகிலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிகில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மவுலிக் மோடி என்பவரை கைது செய்தனர்.