திருக்கோவிலூர் அருகே அண்ணன் மனைவி, மகனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சி

திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறில், அண்ணன் மனைவி, மகனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-04 16:45 GMT
திருக்கோவிலூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழத்தாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்கள் சின்னதுரை, வேணுகோபால். கூலி தொழிலாளர்களான இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. 
இந்த நிலையில் சின்னதுரை சொத்தை பிரிக்காமல் வீடு கட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேணுகோபால், சம்பவத்தன்று தனது அண்ணன் சின்னதுரையின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த தாய் வசந்தாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

தீ வைத்தார்

இதுகுறித்து அறிந்த சின்னதுரையின் மனைவி ஜோதி(வயது 31) தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த வேணுகோபால் மோட்டார் சைக்கிளுக்கு போடுவதற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை தனது அண்ணி ஜோதி மீது ஊற்றி, தீ வைத்து விட்டு ஓடி விட்டதாக தெரிகிறது.  

இதில் ஜோதி மற்றும் அவரது கையில் இருந்த மகன் கவுதம் கார்த்திக்(3) ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதில் வலியால் அலறித்துடித்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வலைவீச்சு

இதுகுறித்து திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்