போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ஜனதாவினர் பேசியதே எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வெளியாக காரணம்-குமாரசாமி
போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ஜனதாவினர் பேசியதே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வெளியாக காரணம் என்று குமாரசாமி கூறியுள்ளார்
ராமநகர்: போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ஜனதாவினர் பேசியதே சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வெளியாக காரணம் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பாடம் புகட்ட வேண்டும்
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் ஒரு கொலை சம்பவம் நிகழ்ந்தது. அதாவது சந்துரு என்ற இளைஞர் கொல்லப்பட்டார். உருது மொழி பேசாததால் தான் அவரை முஸ்லிம் இளைஞர்கள் கொலை செய்ததாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறினார்.
இதை பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் மறுத்தார். இதைதொடர்ந்து கமிஷனர் கமல்பந்த்துக்கு எதிராக பா.ஜனதாவினர் பேசினர். இதனால் தான் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு அம்பலமானது.நேர்மையான அதிகாரியான கமல்பந்தை பா.ஜனதாவினர் அவமதித்தனர். அதனால் அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கமல்பந்தின் ஆதரவாளர்கள் சிலர் இந்த விவகாரத்தை வெளியிட்டுள்ளனர். இந்த அரசின் தவறுகளை போலீஸ் துறையை சேர்ந்தவர்களே வெளியே கொண்டு வந்துள்ளனர். இதில் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன.
அநீதி ஏற்படக்கூடாது
தேர்வில் வெற்றி பெற்ற அனைவரும் பணம் கொடுத்தனர் என்று சொல்ல முடியாது. வெற்றி பெற்றவர்களில் 30 சதவீதம் பேர் பணம் கொடுத்து பணி பெற்று இருப்பார்கள். நியாயமான முறையில் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு அநீதி ஏற்படக்கூடாது என்பது எனது விருப்பம். மந்திரி அஸ்வத் நாராயணுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரசார் கூறுகிறார்கள்.
அதற்கு ஏதாவது ஆதாரங்கள் உள்ளதா?.
உள்துறை மந்திரி அமித்ஷா வரும்போது இந்த செய்திகளில் வர வேண்டும் என்ற நோக்கத்தில் அஸ்வத் நாராயண் ஆதரவாளர்கள் சிலரே அவரது பெயரை இணைத்து தகவலை வெளியிட்டுள்ளனர். அஸ்வத் நாராயணை நீக்க பா.ஜனதாவில் உள்ள சிலர் சதி செய்துள்ளனர்.
முக்கியமான பிரச்சினைகள் குறித்து போராட காங்கிரஸ் தலைவா்கள் தயாராக இல்லை.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.