நொய்யல் ஆற்றின் கரையோரம் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
நொய்யல் ஆற்றின் கரையோரம் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
திருப்பூர்
திருப்பூர் ஆலங்காடு நொய்யல் ஆற்றின் கரையோரம் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு வீடு இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
218 வீடுகளை அகற்ற நோட்டீஸ்
திருப்பூர் நடராஜா தியேட்டர் ரோடு ஆலங்காடு பகுதியில் நொய்யல் ஆற்றின் கரையோரம் நீர்நிலை புறம்போக்கில் குடியிருந்தவர்களின் வீடுகளை காலி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்கனவே நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதன்படி 218 வீடுகளை காலி செய்யுமாறு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களிடம் அறிவித்தனர்.
இதில் 80 வீட்டினர் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்ய விண்ணப்பித்து அவர்களுக்கு வங்கிக்கடன் உதவியுடன் பங்கீட்டு தொகை செலுத்த வசதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக பங்கீட்டுத்தொகை செலுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களின் குடியிருப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் பொக்லைன் எந்திரம், வாகனம் உள்ளிட்டவற்றுடன் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர்.
சாலைமறியல்
இந்த நிலையில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் உள்ளதால் தேர்வு முடிந்த பிறகு வீடுகளை காலி செய்ய வேண்டும். அதுவரை தங்களுக்கு அங்கேயே குடியிருக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறி அப்பகுதியினர் ஆலங்காடு நடராஜா தியேட்டர் ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
இதில் பள்ளி மாணவ-மாணவிகளும் பங்கேற்றனர். மூதாட்டி ஒருவர் ரோட்டில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் துணை கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உதவி ஆணையாளர் வாசுகுமார் மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வீடுகள் இடிப்பு
இதைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் உள்ள வீடுகளை மட்டும் இடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 1 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் மற்ற வீடுகளை இடிக்கும் பணியை அதிகாரிகள் தொடங்கினார்கள். வீடு இடிக்கும் பணி தொடர்ந்து நேற்று மாலை வரை நடைபெற்றது. இதற்காக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த மறியல் சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.