பெங்களூரு வன்முறையில் கைதான 247 பேருக்கு விரைவில் தண்டனை அறிவிப்பு
பெங்களூரு வன்முறையில் கைதான 247 பேருக்கு விரைவில் தண்டனை அறிவிக்கப்படும் என தெரிகிறது.
பெங்களூரு:
பெங்களூருவில் கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி வன்முறை வெடித்தது. போலீஸ் நிலையங்கள், அரசு வாகனங்களுக்கு வன்முறையாளர்கள் தீ வைத்தனர். காவல்பைரசந்திராவில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாசமூர்த்தி வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. முகமது நபிகள் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் அக்காள் மகன் நவீன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட அவதூறு கருத்தால் வன்முறை வெடித்து இருந்தது. இந்த வழக்கில் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருந்ததால், வன்முறை வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து வந்தது.
இந்த வழக்கில் 480 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைதானவர்களில் 247 பேர் மீது பெங்களூருவில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில், என்.ஐ.ஏ. அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வன்முறை குறித்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், இதனால் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு உள்ள 247 பேருக்கும் விரைவில் என்.ஐ.ஏ. கோர்ட்டு தண்டனை விவரத்தை அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை அரசு வக்கீலான பிரசன்னா என்பவரும் உறுதிபடுத்தி உள்ளார்.