ஊழலில் மூழ்கி கிடப்பவர் டி.கே.சிவக்குமார்; மந்திரி அஸ்வத் நாராயண் விமர்சனம்
ஊழலில் மூழ்கி கிடப்பவர் டி.கே.சிவக்குமார் என்று மந்திரி அஸ்வத் நாராயண் விமர்சித்துள்ளார்.
பெங்களூரு:
உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் தன் மீதான போலீஸ் இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு புகார் குறித்து பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஊழலில் மூழ்கி கிடப்பவர்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் என் மீது காங்கிரசார் குற்றம்சாட்டுகிறார்கள். நான் நேர்மையாக பணியாற்றி வருகிறேன். இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனால் உரிய ஆதாரங்கள் இல்லாமல் என் மீது குற்றம்சாட்டுகிறார்கள். இது சரியல்ல. ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் காங்கிரசார் வெளியிட வேண்டும். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் ஒரு ஊழல்வாதி. ஊழல் செய்ததற்காகவே சிறைக்கு சென்று வந்தார். நான் அவ்வாறு எந்த சிறைக்கும் செல்லவில்லை. அவர் ஊழலில் மூழ்கி கிடப்பவர். அவர் ஊழல்வாதிகளின் தலைவர். நாட்டில் காங்கிரஸ் பலவீனம் அடைந்துவிட்டது. கர்நாடகத்திலும் காங்கிரஸ் பலவீனமாகி வருகிறது. சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது.
தைரியம் உள்ளதா?
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள். நேர்மையாக தேர்வு எழுதியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். சித்தராமையா முதலில் டி.கே.சிவக்குமாரின் ஊழல்கள் குறித்து பேச வேண்டும். அவ்வாறு பேச அவருக்கு தைரியம் உள்ளதா?.
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.