கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் லீக் போட்டியில் ஊட்டி பிளாசம் கிரிக்கெட் அணி மற்றும் கெந்தொரை அணி பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த ஊட்டி பிளாசம் அணி 29.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் பிரகாஷ் 48 ரன்கள், சந்தீப் 42 ரன்கள், சம்யுக்த் 33 ரன்கள் மற்றும் அருண் 32 ரன்களை எடுத்தனர்.
கெந்தொரை அணி வீரர் ரகுராம் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார். தொடர்ந்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கெந்தொரை அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியை சேர்ந்த விக்னேஷ் 37 ரன்களும், ரகுராம் 32 ரன்களும் எடுத்தனர். வெற்றி பெற்ற ஊட்டி பிளாசம் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டது.