நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என அரக்கோணத்தில் நடந்த மத்தியபாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் மும்பை ஏ.டி.ஜி.பி. ஸ்ரீ ஜக்பீர் சிங் பேசினார்.
அரக்கோணம்
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என அரக்கோணத்தில் நடந்த மத்தியபாதுகாப்பு படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழாவில் மும்பை ஏ.டி.ஜி.பி. ஸ்ரீ ஜக்பீர் சிங் பேசினார்.
பயிற்சி நிறைவு விழா
ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 படை பிரிவுகளுக்கான 702 பெண் காவலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதன் நிறைவு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் தெற்கு, நவி மும்பை, ஏ.டி.ஜி.பி. ஸ்ரீ ஜக்பீர் சிங் கலந்து கொண்டு வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
எதிர்கால வீரர்கள்
பயிற்சி முடித்துள்ள உங்கள் வாழ்வில் இது ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம். உண்மை, விசுவாசம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் நெறிமுறைகள், தைரியம், நம்பிக்கை மற்றும் மரியாதை ஆகிய மதிப்புகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக மாற வேண்டும். பயிற்சி பெற்றவர்கள் விமான நிலையங்கள், பெருநகரங்கள், அணுசக்தி நிலையங்கள் மற்றும் விண்வெளி மையங்கள் போன்ற பிரிவுகளில் கடமைகளைச் செய்வார்கள்.
மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையங்கள் இந்த மாபெரும் தேசத்தின் குடிமக்களுக்கும், சொத்துகளுக்கும் பாதுகாப்பை வழங்குவதற்காக நல்ல ஒழுக்கமான எதிர்கால வீரர்களை உருவாக்கி வருகின்றன. மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் வளர்ச்சிக்காக அதிகாரிகளும், வீரர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். இந்த படை தற்போது 1,63,590 வீரர்களை கொண்ட ஒரு முதன்மையான பல திறன் கொண்ட அமைப்பாக வளர்ந்துள்ளது.
தொழில்நுட்பத்தை...
2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, தனியார் நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு வழங்க மத்திய தொழிற் பாதுகாப்பு படை விரிவுபடுத்தப்பட்டது. நமது உள்நாட்டு அமைதியை, பொருளாதாரத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் விரோதமான அண்டை நாடுகளால் நமது நாடு சூழப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, ஜம்முவில் உள்ள சத்தா முகாம் அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஒரு மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரி வீரமரணம் அடைந்தார். பலர் காயமடைந்தனர்.
அத்தகைய சூழ்நிலையில், படை வீரர்கள் தங்கள் அணுகுமுறையில் விழிப்புடனும், செயலூக்கத்துடனும் இருக்க வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வீர சாகசங்கள்
தொடர்ந்து பயிற்சியின்போது சிறந்து விளங்கிய ஜோதி தேவி, காவேரியம்மாள், தீப்மாலா லோதி, ரீட்டா தேவி, காந்தி ரம்யா கிருஷ்ணன் ஆகியோருக்கு சான்றிதழ்கள், கோப்பை வழங்கி பாராட்டினார். இதனையடுத்து வீரர்களின் வீர சாகசங்கள், யோகா, துப்பாக்கி சுடுதல் மற்றும் துப்பாக்கி உபகரணங்கள் கையாளுதல் போன்றவைகள் செய்து காண்பித்தனர்.
நிகழ்ச்சியில் அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பயிற்சி மைய டி.ஐ.ஜி. சாந்தி ஜி.ஜெய்தேவ், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையின் சீனியர் கமாண்டன்ட் ரேகா நமிபியார், ஐ.என்.எஸ். ராஜாளி கமாண்டர் அபிஷேக் பட்டாச்சார்யா, அணிவகுப்பு கமாண்டர்கள் மோனிகா துபே மற்றும் பொம்மி சிங் உள்ளிட்ட அதிகாரிகளும், மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களும் கலந்து கொண்டனர்.