தூத்துக்குடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளிநடப்பு செய்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று காலை 11.30 மணிக்கு வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மதியம் 1.30 மணி வரை அலுவலக பணிகளில் ஈடுபடாமல் பணியை புறக்கணித்தனர். இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
வெளிநடப்பு செய்த ஊழியர்கள் பீச் ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி கிளை தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். கோட்ட இணை செயலாளர் ஆர்.சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.