குவைத் நாட்டில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்பு: தாம்பரம் போலீஸ் கமிஷனருக்கு நேரில் நன்றி தெரிவித்தார்

குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்றபோது வீட்டு உரிமையாளர்கள் கொடுமையில் சிக்கிய பெண் பத்திரமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-05-04 04:40 GMT
தாம்பரம்,  

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் லட்சுமண் நகரை சேர்ந்தவர் வனஜா (வயது 58). இவரது மகள் மஞ்சுளா (38). இவர் குடும்ப வறுமை காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த பாஷா என்பவர் நடத்தும் ஏஜென்சி மூலம் கடந்த மார்ச் 17-ந்தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். அங்கு வீட்டு வேலைக்கு சென்றவரை, வீட்டு உரிமையாளர்கள் துன்புறுத்தி உள்ளனர். இது குறித்து வனஜாவிற்கு, வாட்ஸ்-ஆப் வாயிலாக, மஞ்சுளா தகவல் அளித்தார். அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 27-ந்தேதி, பல்லாவரம் போலீஸ் நிலையம் மற்றும் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில், தன் மகளை மீட்டு தரக்கோரி, வனஜா புகார் அளித்தார்.

இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவிட்டார் இதன்படி, மஞ்சுளாவை குவைத்திற்கு அனுப்பிய ஏஜென்ட் பாஷா (31), சர்தார் (50) ஆகியோரை பிடித்து விசாரித்து, மஞ்சுளா நாடு திரும்ப ஏற்பாடு செய்தனர். 

இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, மஞ்சுளா சென்னை திரும்பினார். இதையடுத்து, மீட்கப்பட்ட பெண் தன் தாயுடன் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து போலீஸ் கமிஷனர் ரவி மற்றும் போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், பெண்ணை மீட்க உதவிய பல்லாவரம் உதவி கமிஷனர், ஆரோக்கிய ரவிந்திரன், இன்ஸ்பெக்டர் தயாள், போலீஸ் ஏட்டு டொமினிக் ராஜ் ஆகியோரையும் கமிஷனர் ரவி பாராட்டினார்.

மேலும் செய்திகள்