ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்:பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை

ரம்ஜான் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Update: 2022-05-03 22:15 GMT
சேலம்:
ரம்ஜான் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ரம்ஜான் பண்டிகை
ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். ரம்ஜான் மாதம் தொடங்கியதில் இருந்து 30 நாட்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு கடந்த மாதம் 3-ந்தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சேலத்தில் நேற்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் சிறப்பாக கொண்டாடினர். முன்னதாக முஸ்லிம்கள் நேற்று அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து பள்ளி வாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். பின்னர் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
ஈத்கா மைதானம்
சேலம் டவுன் ஜாமியா பள்ளிவாசலில் முத்தவல்லி அன்வர் தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஜாமியா கமிட்டி நிர்வாகிகள் உள்பட ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
அதே போன்று சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். இதே போன்று சேலம் புதிய பஸ் நிலையம், கோட்டை, முள்ளுவாடி கேட், சன்னியாசிகுண்டு, 4 ரோடு, செவ்வாய்பேட்டை, அடிவாரம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட மாநகரில் உள்ள பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மேலும் ஒருவரையொருவர் இனிப்பு வழங்கியும் பண்டிகையை கொண்டாடினர். மேலும் பள்ளி வாசல்கள் முன்பு பிரியாணி பொட்டலங்கள் வழங்கியும் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கெங்கவல்லி
கெங்கவல்லி இலுப்பைத்தோப்பு ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதற்கு வடக்குத்தெரு பேஷ்இமாம் அமானுல்லா, தெற்கு பேஷ் இமாம் சிக்கந்தர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வடக்குத்தெரு பள்ளிவாசல்  முத்தவல்லி ஹாஜி லியாகத்அலி, செயலாளர் முஸ்தாக், தெற்கு பள்ளிவாசல் முத்தவல்லி அப்துல் சுக்கூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வடக்குத்தெரு பள்ளிவாசலில் இருந்து ஜமாத்தார்கள் கடைவீதி வழியாக ஊர்வலமாக ஈத்கா மைதானத்துக்கு சென்றனர். இதில் கெங்கவல்லி வடக்குத்தெரு, தெற்குத்தெரு ஆணையாம்பட்டி, தெடாவூர், 74 கிருஷ்ணாபுரம், கூடமலை மற்றும் நடுவலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்கள் திரளாக கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திக்கொண்டனர். 
தம்மம்பட்டி பகுதியில் முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இதையொட்டி தம்மம்பட்டி கடை வீதியில் உள்ள ஜாமியா மஸ்ஜித்தில் இருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதற்கு  இமாம் மன்சூர் அகமது ரப்பானி தலைமை தாங்கினார். தம்மம்பட்டி பஸ் நிலையம் பள்ளிவாசலின் இமாம் ஹஸனி முகமது ரமலானின் சிறப்புகளை எடுத்துரைத்தார். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்து ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
தலைவாசல்
தலைவாசலில் முத்தவல்லி சவுகத் அலி தலைமையில் முஸ்லிம்கள் பஸ் நிலையம், போலீஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக மும்முடி சென்று அங்கு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதே போல தேவியாக்குறிச்சி, காட்டுக்கோட்டை, வீரகனூர், சாத்தப்பாடி மற்றும் மேட்டூர், எடப்பாடி, தாரமங்கலம், சங்ககிரி உள்பட மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் நேற்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடினார்கள்.

மேலும் செய்திகள்