ஈரோட்டில் பரிதாபம்; மளிகை கடையை திறந்தபோது மின்சாரம் தாக்கி பெண் சாவு
ஈரோட்டில் மளிகை கடையை திறந்தபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு
ஈரோட்டில் மளிகை கடையை திறந்தபோது மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
மளிகைக்கடை
ஈரோடு பூந்துறைரோடு ரகுபதிநாயக்கன்பாளையம் வாய்க்கால்மேடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் அந்த பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சரண்யா (வயது 28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குமாருக்கு உதவியாக சரண்யா கடையை கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலையில் குமார் தனது சொந்த ஊரான திருச்சி மாவட்டம் ரெட்டியார்பட்டிக்கு சென்று இருந்தார். இதனால் சரண்யா, கடையில் வியாபாரம் செய்து வந்தார். இரவில் வியாபாரம் முடிந்தபிறகு கடையை மூடிவிட்டு அவர் வீட்டுக்கு சென்றார்.
மின்சாரம் பாய்ந்தது
இந்தநிலையில் நேற்று காலை சரண்யா கடையை திறப்பதற்காக சென்றார். அப்போது அவர் ஷட்டரை பிடித்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே சரண்யா பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், மளிகைக்கடையில் மின்கசிவு காரணமாக ஷட்டரில் மின்சாரம் பாய்ந்ததும், அதனால் சரண்யா கடையை திறக்க முயன்றபோது மின்சாரம் பாய்ந்து இறந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பலியான சரண்யாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோட்டில் கடையை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.