கரூரில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி கரூரில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
கரூர்,
ரம்ஜான் பண்டிகை
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கரூர் ஐக்கிய ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இதில் பெரிய பள்ளிவாசல், சின்ன பள்ளிவாசல், ஈத்கா பள்ளிவாசல் உள்பட பல்வேறு பள்ளிவாசல்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது நோன்பின் மகத்துவம் குறித்தும், ஏழை-எளியவர்களுக்கு உதவி செய்வதின் மூலம் அல்லாவின் பேரருளை பெறுவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
வாழ்த்து
வானில் பிறையை பார்த்து நோன்பு நோற்க வேண்டும். பிறையை பார்த்து நோன்பை முடித்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட நபிகள் நாயகம் கூறிய போதனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொழுகை முடிந்ததும் அன்பின் வெளிப்பாடாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இதேபோல் கரூரில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருமாநிலையூரில் உள்ள மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.
ஈத்கா மைதானம்
ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளப்பட்டியில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவரையொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இதேபோன்று அரவக்குறிச்சியில் உள்ள ஈத்கா மைதானத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு
தொழுகையில் ஈடுபட்டனர்.ரம்ஜான் பண்டிகையையொட்டி வேலாயுதம்பாளையம் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து மசூதிக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர். இதேபோல் வேலாயுதம்பாளையம்-கரூர் ரோட்டில் உள்ள ஜன்னத்துல பிர்தொஸ் பள்ளிவாசல், தோட்டக்குறிச்சி மதர்ஸா பள்ளிவாசல், கட்டிப்பாளையம், டி.என்.பி.எல்., புஞ்சை புகழூர் ஆகிய பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. தொழுகைகள் முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் ஒருவருக் கொருவா் கட்டி தழுவி,ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.