மகா மாரியம்மன் கோவிலில் அக்னி குண்டம் திருவிழா

சித்திரை திருவிழாவையொட்டி மகா மாரியம்மன் கோவிலில் அக்னி குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Update: 2022-05-03 18:30 GMT
நொய்யல்,
மகா மாரியம்மன் கோவில்
திருக்காடுதுறையில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. அதேபோல் கடந்த 1-ந் தேதி வடிசோறு நிகழ்ச்சியும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பூக்குழி வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மதியம் 2.30 மணியளவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். 
அக்னி குண்டம் திருவிழா
அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் தயாராக இருந்த அக்னி குண்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக மகா மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கிடா வெட்டும் நிகழ்ச்சி
திருக்காடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கலிட்டனர். மேலும், மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மன் முன் வைத்து பூஜை செய்தனர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது.இன்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், கிடா வெட்டுதல், மாலை அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்