அட்சய திருதியையில் நகைக்கடைகளில் விற்பனை மந்தம்

அட்சய திருதியையில் நகைக்கடைகளில் விற்பனை மந்தமாக நடந்தது.

Update: 2022-05-03 18:03 GMT
பெரம்பலூர்
பெரம்பலூரில் அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு பிரம்மபுரீஸ்வரர் கோவில், மதனகோபாலசுவாமி கோவில், எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று காலை 8 மணி முதலே நகைக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. கடந்த சிலதினங்களுக்கு முன்பு ஒரு பவுன் நகை ரூ.42 ஆயிரம் வரை விற்ற தங்க நகைகள், நேற்று ரூ.39 ஆயிரத்திற்கு குறைவாக விற்கப்பட்டன. வெள்ளி ஆபரணங்கள் சில தினங்களுக்கு முன்பு ஒரு கிராம் ரூ.74 வரை விற்கப்பட்டன. ஆனால் நேற்று ரூ.70 முதல் ரூ.69-க்கு விற்பனை நடைபெற்றதால், பொதுமக்களிடம் வெள்ளி, தங்க ஆபரணங்கள் விலை மேலும் குறையக்கூடும், ஆகவே மேலும் சிலதினங்கள் காத்திருக்கலாம் என்ற எண்ணஓட்டமும் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் விற்பனை மந்தநிலைக்கு காரணமாக இருக்ககூடும் என்ற நகை வியாபாரி ஒருவர் தெரிவித்தார். கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளில் அட்சய திருதியை சிறப்பாக கொண்டாடப்படவில்லை. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் அட்சயதிருதியை தினத்தையொட்டி நகைகள் விற்பனை அதிகம் நடைபெறும் என்று நகை வியாபாரிகளிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஒருசில கடைகள் தவிர, பெரும்பாலான நகைக்கடைகளில் மற்ற தினங்களைப்போலவே விற்பனை நடைபெற்றது. அட்சய திருதியை தினத்தையொட்டி நடைபெறும் சிறப்பு விற்பனை மந்தமாக இருந்தது. மேலும் ரம்ஜான் பண்டிகையையொட்டி தேசிய விடுமுறை தினமாக இருந்ததால், பெரம்பலூர் கடைவீதி, தேரடி, மாரியம்மன்கோவில் தெரு, சிவன்கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நகைக்கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிகம் இன்றி இருந்தது. 

மேலும் செய்திகள்