அட்சய திருதியையை முன்னிட்டு சிறப்பு கருடசேவை
அட்சய திருதியையை முன்னிட்டு சிறப்பு கருடசேவை நடைபெற்றது.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தாதம்பேட்டை பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் அட்சய திருதியையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்விக்கப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நம்பெருமான் பக்தர்களுக்கு எழுந்தருளி சேவை சாதித்தார். மாலையில் நம்பெருமான் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளி கருட சேவை நடைபெற்றது. பக்தர்கள் பல்வேறு ஆழ்வார் பாசுரங்களை பாடி வழிபாடுகளை செய்தனர். நம்பெருமானுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தா.பழூர் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.