இடப்பிரச்சினையால் கோஷ்டி மோதல்; 7 பேர் மீது வழக்கு
இடப்பிரச்சினையால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மேலசிந்தாமணி கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். இவரது இளைய சகோதரர் மருதமுத்து. இவர்களுக்கு பாகப்பிரிவினை முடிவடைந்த நிலையில் பொதுப்பாதை தொடர்பாகவும், வீட்டு மனையில் வளர்க்கப்பட்டு வரும் மரங்களினால் வீடுகளின் கூரைகள் சேதம் அடைவது தொடர்பாகவும் தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் கோஷ்டி மோதலாக மாறியது. இந்த சம்பவத்தில் மருதமுத்துவின் மகன் செல்லதுரையின் மோட்டார் சைக்கிள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. சம்பவத்தில் வைத்திலிங்கத்தின் மனைவி சாந்தி(46), மருதமுத்துவின் மகன் செல்லதுரை ஆகியோர் காயம் ஏற்பட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வைத்திலிங்கத்தின் மனைவி சாந்தி மற்றும் மருதமுத்துவின் மகன் செல்லதுரை ஆகியோர் தனித்தனியாக தா.பழூர் போலீசில் புகார் அளித்தனர். சாந்தி அளித்த புகாரின் பேரில் மருதமுத்து, மருதமுத்துவின் மகன் செல்லதுரை, மருதமுத்துவின் மனைவி அமுதா ஆகியோர் மீதும், செல்லத்துரை அளித்த புகாரின் பேரில் வைத்திலிங்கம், வைத்திலிங்கத்தின் மனைவி சாந்தி, வைத்திலிங்கத்தின் மகள் வித்யா, மகன் சதீஷ் ஆகியோர் மீதும் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.