இரியூர் அருகே மைனர் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்த வாலிபர் கைது

இரியூர் அருகே மைனர் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துகொண்ட வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்

Update: 2022-05-03 16:52 GMT
சிக்கமகளூரு: இரியூர் அருகே மைனர் பெண்ணை ரகசியமாக திருமணம் செய்துகொண்ட வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி இரியூர் போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-

மைனர் பெண்ணுடன் திருமணம்

சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் டவுன் பகுதியில் 17 வயது மைனர் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், ஒரு கல்லூரியில் பி.யூ. முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மைனர் பெண்ணுக்கு, அதேபகுதியை சேர்ந்த அனுமந்தராயப்பா(வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 

இதையடுத்து 2 பேரும் தனியாக சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம்(ஏப்ரல்) 6-ந்தேதி மைனர் பெண்ணை, அனுமந்தராயப்பா யாருக்கும் தெரியாமல் ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று மஞ்சள் கயிற்றில் தாலி கட்டி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர்கள், தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது ஆசைவார்த்தை கூறி மைனர் பெண்ணுடன், அனுமந்தராயப்பா உல்லாசமாக இருந்துள்ளார். இதேபோன்று பலமுறை அனுமந்தராயப்பா, மைனர் பெண்ணுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
 
வாலிபர் கைது

இந்த விஷயத்தை மைனர் பெண், தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார். மேலும் கழுத்தில் தாலி இருப்பதையும் மறைத்து வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மைனர் பெண்ணின் கழுத்தில் தாலி இருப்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி மைனர் பெண்ணிடம் பெற்றோர் கேட்டனர். அப்போது மைனர் பெண், அனுமந்தராயப்பா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். 

மேலும் அவர் தான் தனது கணவர் என்றும், இல்லற வாழ்க்கையில் இணைந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதைகேட்டு ஆத்திரம் அடைந்த பெற்றோர், மகளின் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி வீசினர். இதையடுத்து இரியூர் போலீசில் தங்களது மகளை அனுமந்தராயப்பா என்பவர் காதலிப்பதாக ஏமாற்றி கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாகவும், அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அனுமந்தராயப்பாவை கைது செய்தனர். கைதான அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்