பிளஸ்-2 தேர்வு நாளை தொடக்கம்: 21 ஆயிரம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு

தர்மபுரி மாவட்டத்தில் 79 மையங்களில் நாளை தொடங்கும் பிளஸ்-2 தேர்வை 21,027 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

Update: 2022-05-03 16:52 GMT
தர்மபுரி:
பிளஸ்-2 தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ம் தேதி வரை நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பிளஸ்-2 பொதுத் தேர்வு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வுகள் நேரடியாக நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி நாளை முதல் தொடங்கும் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 176 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 570 மாணவர்கள், 10 ஆயிரத்து 457 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 27 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 79 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும் படை
தேர்வையொட்டி மொத்தம் 79 தேர்வு மைய கண்காணிப்பாளர்களும், 1,300 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவ-மாணவிகள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்க 150 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தனித்தேர்வர்களுக்காக தர்மபுரி சோகத்தூர் ஆக்சிலியம் மெட்ரிக்குலேசன் பள்ளி, அரூர் ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 680 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பிளஸ் -2 பொதுத் தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் மாணவ-மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்