முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படுகிறாரா?-மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பதில்
முதல் -மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்று பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா வருகையால், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட ஒட்டுமொத்த மந்திரிசபையும் மாற்றப்படும் என்று கூறப்பட்டது. இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்-மந்திரி மாற்றப்படுகிறாரா? என்ற கேள்விக்கு கர்நாடக பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பதிலளிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து பெங்களூருவில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒரு சாமானிய மனிதர். அவர் ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக உழைக்கிறார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அவர் பணியாற்றுகிறார். அவரை கர்நாடக மக்கள் நேசிக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் உங்களின் இந்த கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. என்னிடம் அதற்கான பதில் இல்லை.
இவ்வாறு அருண்சிங் கூறினார்.
ஆனால் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, முதல்-மந்திரியை மாற்றும் திட்டம் இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது