விரிகோடு ரெயில்வே கேட்டில் சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் நின்ற ரெயில்
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு ரெயில்வே கேட்டில் சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் ரெயில் நின்றதால் கேட் மூடப்பட்டது. இதனால், 108 ஆம்புலன்சுகளில் சென்ற நோயாளிகள் தவித்தனர்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு ரெயில்வே கேட்டில் சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் ரெயில் நின்றதால் கேட் மூடப்பட்டது. இதனால், 108 ஆம்புலன்சுகளில் சென்ற நோயாளிகள் தவித்தனர்.
அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு
மார்த்தாண்டம்-கருங்கல் சாலையில் விரிகோட்டில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட் குழித்துறை ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது.
இந்த பகுதியை ரெயில்கள் கடந்து செல்லும் போதெல்லாம் ரெயில்வே கேட் மூடப்படும். அப்போதெல்லாம் இங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் குழித்துறை ரெயில் நிலையத்திற்கு செல்ல சிக்னல் கிடைக்க தாமதமாகும் போது ரெயில்கள் விரிகோடு பகுதியில் நிறுத்தப்படும். அப்போது ரெயில்வே கேட் மூடப்பட்டு ½ மணி வரை போக்குவரத்து தடை ஏற்படுவது வழக்கம்.
சிக்னல் கிடைக்காமல் நின்ற ரெயில்
இந்த நிலையில் நேற்று காலையில் கன்னியாகுமரியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ரெயில் விரிகோடு கேட் பகுதிக்கு பகல் 11¼ மணியளவில் வந்தது. அப்போது அந்த ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்திற்கு செல்ல சிக்னல் கிடைக்கவில்லை. எனவே அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
இதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டு மார்த்தாண்டம்-கருங்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரண்டு பக்கமும் ஏராளமான பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன.
ஆம்புலன்சுகள் நிறுத்தம்
கருங்கலில் இருந்து ஒரு நோயாளியுடன் திருவனந்தபுரம் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு வந்த ஒரு 108 ஆம்புலன்ஸ் தொடர்ந்து செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது. இதுபோல் மார்த்தாண்டம் பகுதியில் இருந்து கருங்கல் பகுதிக்கு நோயாளியுடன் சென்ற ஒரு ஆம்புலன்சும் விரிகோடு ரெயில்வே கேட் மூடப்பட்டு இருந்ததால் தொடர்ந்து செல்ல முடியாமல் அங்கேயே நின்றது. அவற்றில் இருந்த நோயாளிகளும், உறவினர்களும் மிகவும் சிரமம் அடைந்தனர்.
அதன் பிறகு ¼ கால் மணி நேரம் கடந்து அதாவது 11½ மணிக்குப் பின்னர்தான் சிக்னல் கிடைத்தது. அதன்பின்பு அந்த ரெயில் குழித்துறை ரெயில் நிலையத்துக்கு சென்றது. அதன் பிறகுதான் ரெயில்வே கேட் திறக்கப்பட்டு பஸ்களும், ஆம்புலன்சுகளும், இதர வாகனங்களும் புறப்பட்டு சென்றன.
பொதுமக்கள் கோரிக்கை
இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுவதால் தற்போது உள்ள சாலை வழியாக ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டத்தில் மாற்றுப்பாதையில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. இதற்கு அந்த பகுதிமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
எனவே பொதுமக்கள் பயன்படும் வகையில் தற்போது உள்ள சாலை வழியாக மேம்பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
---