அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் தங்கம் வாங்க குவிந்த பொதுமக்கள்
அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் தங்கம் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
கோத்தகிரி
அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளில் தங்கம் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
அட்சய திருதியை
அட்சய திருதியை தினத்தில் வாங்கும் புதிய பொருட்கள் வீடுகளில் தங்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எனவே நேற்று அட்சய திருதியையொட்டி தங்கம் வாங்க மக்கள் அதிக ஆர்வம் காண்பித்ததால் நகைக்கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அட்சய திருதியை களையிழந்து போனது. இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்தோடு மக்கள் தங்கம் வாங்கினார்கள். எனவே கோத்தகிரி பகுதில் உள்ள நகை கடைகளில் கூட்டம் களை கட்டியது.
நகை கடைகளில் குவிந்தனர்
ஏற்கனவே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் முன்னணி நகை கடைகள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன்பே முன்பதிவை தொடங்கி இருந்தனர். கிராமுக்கு இவ்வளவு குறைவு, தங்கத்துக்கு வெள்ளி இலவசம், ஒவ்வொரு விற்பனைக்கும் இலவச பரிசுகள் போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளையும் அறிவித்திருந்தனர். மேலும் நேற்று காலை வழக்கத்திற்கு முன்னதாகவே நகை கடைகள் திறக்கப்பட்டன. கோத்தகிரி கடைவீதி, காமராஜர் சதுக்கம், மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் திருவிழா கூட்டம் போல் மக்கள் திரண்டனர். பெரிய அளவில் நகைகள் வாங்க இயலாதவர்களும் கூட ஒரு கிராம், 2 கிராம் வகையிலான தங்க நகைகளை வாங்கிச் சென்றனர்.