வாடகையை உயர்த்தி தரக்கோரி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
மீஞ்சூர் அடுத்த காட்டுபள்ளி ஊராட்சியில் நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகளின் வாடகையை உயர்த்தி தரக்கோரி லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சேமிப்பு கிடங்கு
மீஞ்சூர் அருகே காட்டுபள்ளி ஊராட்சியில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி நிலக்கரி சேமிப்புக் கிடங்கு உள்ளது. இதை தனியார் நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ளது. இந்த கிடங்கிற்கு ஒடிசா மற்றும் இதர மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.
இந்த நிலக்கரியை தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்ல ஒப்பந்த அடிப்படையில் 400-க்கும் மேற்பட்ட கனரக லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது.
விலை உயர்வு
இந்த நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், சுங்க கட்டணம் உயர்வு, வாகனங்களின் உறுதி பாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் லாரி உரிமையாளர்கள் பெரிது பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் லாரி உரிமையாளர் சங்கத்தினர் ஒன்றுகூடி ஒப்பந்த நிலக்கரி நிறுவனத்திடம் லாரியின் வாடகையை உயர்த்த கோரி மனு அளித்தனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் நிலக்கரி கொண்டு செல்லும் நிலக்கரி லாரிகளுக்கு வாடகை உயர்த்தாவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
போராட்டம்
அதன்படி நேற்று முதல் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் எண்ணூர் காட்டுப்பள்ளி கனரக லாரிகள் சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சுரேஷ், பொருளாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் நிலக்கரி கிடங்கு முன்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.