மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகை
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் கூடல் வாடி மற்றும் பெரிய மாஞ்சாங்குப்பம், சிறிய மாஞ்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் கூடல் வாடி, பெரிய மாஞ்சாங்குப்பம், சின்ன மாஞ்சாங்குப்பம் போன்ற பகுதியில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் இன்சூரன்ஸ் கம்பெனியில் ரூ.1 லட்சம் கட்டினால், ரூ.2 லட்சம் பணத்தை 5 ஆண்டுகள் கழித்து தருவதாக ஆசை வார்த்தைகளை கூறினார்கள். இதை நம்பி நாங்கள் அந்த இன்சூரன்ஸ் கம்பெனியில் மாதம் தொறும் பணம் செலுத்தி வந்தோம். அதற்கான பத்திரத்தையும் அவர்கள் கொடுத்தனர். தற்போது 5 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கேட்டபோது, பணம் தர முடியாது என கூறி மிரட்டி வருகிறார்கள்.
புகார் மனு
எனவே இன்சூரன்ஸ் கம்பெனி நடத்தி இரட்டிப்பு பணம் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை பெற்றுத்தர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர், இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.