கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்படும் - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை முன்னிட்டு கிழக்கு கடற்கரை சாலை போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கூறி உள்ளார்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 27-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாமல்லபுரம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட மது விலக்கு துணை கமிஷனர் துரைப்பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் மாமல்லபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் முன்னிலையில் வகித்தனர்.
இந்த கூட்டத்தில் உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாமல்லபுரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் கூறியவதாவது:- ஆட்டோ டிரைவர்கள் காக்கி சீருடை அணிவது கட்டாயம், அவரவர் ஆட்டோக்களில் உரிமையாளர் பெயர் மற்றும் செல்போன் எண் எழுத வேண்டும், மது அருந்தி விட்டு ஆட்டோ ஓட்டக்கூடாது. அப்படி ஓட்டுபவர்கள் பற்றி தகவல் வந்தால் அவர்கள் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜூலை மாதம் முதல் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாமல்லபுரம் போலீஸ் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரப்படும். செஸ் ஒலிம்பியாட் முடியும் வரை ஆட்டோ டிரைவர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் எங்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வலியுறுத்தி பேசினார்.