மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது-புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. புதிய அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-05-02 23:00 GMT
மேட்டூர்:
மேட்டூரில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ள 4 யூனிட் கொண்ட பழைய அனல் மின் நிலையமும், 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையமும் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் பழைய அனல் மின் நிலையத்தில் 1-வது யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்றது. மற்ற 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, மின்தேவை குறைந்ததன் காரணமாக 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஆனால் பொது மக்களிடையே நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. 
இந்த நிலையில் பழைய அனல் மின் நிலையத்தில் உள்ள அனைத்து யூனிட்டுகளிலும் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது இதனால் அதன் முழு உற்பத்தி திறனான 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட புதிய அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதனால் கொதிகலன் குழாய் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக புதிய அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வந்த 600 மெகாவாட் மின் உற்பத்தி முழுமையாக தடைப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்