சேலம் சிறையில் உடல்நலக்குறைவு: வீரப்பனின் அண்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதி

சேலம் சிறையில் உடல்நலக்குறைவால் வீரப்பனின் அண்ணன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

Update: 2022-05-02 22:49 GMT
சேலம்:
சேலம் மத்திய சிறையில் சுமார் 800-மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயுள் தண்டனை கைதியாக சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மீசை மாதையன் (வயது 73) அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 6 மாதமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று முன்தினம் மீசை மாதையனுக்கு சிறுநீரக பிரச்சினையால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவருக்கு சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறைக்காவலர்கள், மீசை மாதையனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான், அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையை முடித்து கொண்டு மீண்டும் சிறைக்கு திரும்பி இருந்தநிலையில் தற்போது மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்