சூறை காற்றில் வீட்டின் மேற்கூரைகள் பறந்தன; வாைழகள், மின்கம்பங்கள் சாய்ந்தன
டி.கல்லுப்பட்டி அருகே சூறை காற்றில் வீட்டின் மேற்கூரைகள் பறந்தன. வாழைகள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
பேரையூர்,
டி.கல்லுப்பட்டி அருகே சூறை காற்றில் வீட்டின் மேற்கூரைகள் பறந்தன. வாழைகள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
சூறை காற்றுடன் பலத்த மழை
மதுரை மாவட்டம் பேரையூர், டி.கல்லுப்பட்டி, டி.குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் இப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறை காற்றும் வீசியது.
பேரையூரில் 20.2 மில்லி மீட்டர் மழை பதிவானது. மேலும் டி.குன்னத்தூர் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழையினால் டி. குன்னத்தூர், ஆதனூர், கவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மரங்களும் 2 மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.
வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன
கவுண்டன்பட்டியில் உள்ள சீனிவாசன் என்பவர் தோட்டத்தில் 2 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழைகள் பலத்த காற்றில் முறிந்து சேதமடைந்தன. ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் 3 மா மரங்களும், வாழை மரங்களும் வேரோடு சாய்ந்து விழுந்தன.
அதோடு அப்பகுதி கிராமங்களில் உள்ள 15 வீடுகளின் சிமெண்டு மேற்கூரைகள் சூறை காற்றில் பறந்தன.மண் சுவர், ஓட்டு வீடுகளும் சேதமடைந்தன.
தந்தை-மகன் படுகாயம்
பேரையூர் தாலுகா பெருமாள்பட்டி காலனி தெருவில், வசிக்கும் விஸ்வரூபன் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் விஸ்வரூபன் (வயது 34) அவரது மகன் யாஷிகன் (6) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம், பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
காற்றினால் சேதமடைந்த வாழைகள் மற்றும் வீடுகள் குறித்து தோட்டக்கலைத் துறையினர், மற்றும் வருவாய்துறையினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.