தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
குளச்சல்:
குளச்சல் அருகே பனவிளையை சேர்ந்தவர் குமாரதாஸ் (வயது 51). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சொந்த ஊர் திரும்பி விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி விஜயகுமாரி (46).
இவர்களுடைய மகன் கவுதன் (20), நாகர்கோவிலில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். மகள் கவுசிகா (18) லட்சுமிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
விஜயகுமாரி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் விஜயகுமாரி வீட்டில் இருந்தார். அப்போது அங்குள்ள ஒரு அறையில் மகள் கவுசிகா படித்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் விஜயகுமாரி வீட்டில் உள்ள ஹாலில் திடீரென தூக்கில் தொங்கினார். சிறிது நேரத்தில் வெளியே வந்த கவுசிகா, தாய் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் விஜயகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.