பெரியார் பஸ் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு அதிகாரிகள் நிபந்தனை
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு, தேர்வு எழுத பெற்றோருடன்தான் வர வேண்டும் என அதிகாரிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
மதுரை,
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட மாணவிகளுக்கு, தேர்வு எழுத பெற்றோருடன்தான் வர வேண்டும் என அதிகாரிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
மாணவிகள் மோதல்
மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் கடந்த 30-ந்தேதி அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவிகள் பஸ் ஏற வந்துள்ளனர். அப்போது அந்த மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலாக பரவியது.
இந்த நிலையில் நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, மோதலில் தொடர்புடைய மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் முன்னிலையில் பல்வேறு அறிவுரைகள் வழங்கினர்.
மாணவிகளுக்கு கவுன்சிலிங்
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாநகராட்சி கல்வி அலுவலர் ஆதி ராமசுப்பு தலைமையிலான குழுவும் மாணவிகளிடம் விசாரணை நடத்தியது. பின்னர் மாணவிகளுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவிகளின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மேலும் மாணவிகள் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டனர்.
இதுதவிர அரசு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் அதுவரை சம்பந்தப்பட்ட மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும், தேர்வுக்கு பெற்றோருடன் வர வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.