குளங்களில் இருந்து களிமண் எடுக்க அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
மண்பாண்ட ெதாழிலுக்கு குளங்களில் இருந்து களிமண் எடுக்க அனுமதி வழங்கக்கோரி மண்பாண்ட தொழிலாளர் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகர்கோவில்:
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர் சங்க குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையில் வில்லச்சேரி, புலியூர்குறிச்சி, நண்டன்குளம், உள்ளிட்ட குளங்களில் இருந்து களிமண், குறுமண் எடுப்பதற்கு போர்க்கால அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க வட்டார செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். சங்கரகுற்றாலம், ஜெயக்குமாரி, முருகன், சேகர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கண்ணன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். வட்டார தலைவர் மிக்கேல், தமிழ்நாடு விவசாய சங்க வட்டார செயலாளர் சுப்பிரமணியம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி போராட்டத்தை முடித்து வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர்கள், மண்பாண்ட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.