மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு

மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு அளித்தனர்.

Update: 2022-05-02 20:29 GMT
தாமரைக்குளம்:

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள், கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் அளித்த மனுவில், திருமானூர் ஒன்றியத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளும் தொழிலில் ஈடுபட்டு வந்தோம். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மணல் குவாரி செயல்படாததால் தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்து மாட்டு வண்டிகளில் மணல் அள்ள தமிழக அரசிடம் கலெக்டர் அனுமதி பெற்றுத்தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.
முதியோர் உதவித்தொகை
உடையார்பாளையம் தாலுகா த.சோழங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த காசிநாதன் அளித்த மனுவில், கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ஜெயங்கொண்டம் சமூக நல தாசில்தாரிடம் இருந்து முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை தனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. எனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் வேலைக்கு செல்ல இயலாததால், சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்