ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும்

லால்குடி அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர்

Update: 2022-05-02 20:15 GMT
திருச்சி, மே.3-
லால்குடி அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
குறைதீர் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் எஸ்.சிவராசு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.
திருச்சி மாவட்ட கால்நடை செயற்கை முறை கருவூட்டாளர் சங்கம் சார்பில் தலைவர் செங்குட்டுவன் தலைமையிலான நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கால்நடை செயற்கை கருவூட்டல் பயிற்சி முடித்த எங்களுக்கு வயது தளர்வு சலுகை வழங்கி தகுதி அடிப்படையில் முன்னுரிமை அளித்து தொகுப்பூதியம் அடிப்படையில் பணி வழங்க வேண்டும். 20 ஆண்டுக்கும் மேலாக கிராம பொதுமக்களுக்கும், கால்நடை துறைக்கும் இணைப்பு பாலமாக செயல்படும் எங்கள் சங்க உறுப்பினர்களுக்கு தனிநல வாரியம் அமைக்காத பட்சத்தில் வேறு நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி
நாம் தமிழர் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் பாசறை இணை செயலாளர் கிரிஜா கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், கணவன்-மனைவி இருவரில்  ஒருவர் இறக்க நேரிட்டால், தனித்து வாழும் நபரின் குடும்ப அட்டையை வட்ட வழங்கல் அலுவலகம் ரத்து செய்து விடுவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். எனவே, தனித்து விடப்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் ரேஷன் கார்டுகளை ரத்து செய்யாமல் அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி
லால்குடி அருகே உள்ள சாத்தபாடி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில், சாத்தப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு வருகிற 25-ந் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதே மனு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
உப்பிலியபுரத்தை சேர்ந்த 85 வயதான ஒய்வு பெற்ற ஆசிரியை காந்திமதி கொடுத்துள்ள மனுவில், நான் 37 ஆண்டுகள் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். டி.முருங்கைப்பட்டி கிராமத்தில் உள்ள நிலத்தை 2019-ம் ஆண்டு எனது மகள் என்னை பராமரிப்பாள் என கருதி அவருக்கு தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி கொடுத்தேன். தற்போது என்னை கவனிக்காமல் விட்டு விட்டாள். எனவே, நான் எழுதி கொடுத்த தானசெட்டில்மெண்ட்டை ரத்து செய்து விட்டு மீண்டும் எனக்கு உரிமை பெற்றுத்தர வேண்டுகிறேன் என கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 347 மனுக்கள் பெறப்பட்டன.

மேலும் செய்திகள்