மனுக்களை தரையில் கொட்டி தந்தையுடன் வாலிபர் தர்ணா

கலெக்டர் அலுவலகம் முன்பு மனுக்களை தரையில் கொட்டி தந்தையுடன் வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-05-02 20:09 GMT
கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை வாலிபர் ஒருவர் தனது தந்தையுடன் வந்தார். பின்னர் அவர் தான் கொண்டு வந்திருந்த மனுக்களை தரையில் கொட்டி தர்ணாவில் ஈடுபட்டார். 

இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து அவர்களை சமாதானப்படுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் பண்ருட்டி அடுத்த பி.ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 30), அவரது தந்தை பழனி என்பதும், இவர்களது பூர்வீக சொத்தை தனிநபர்கள் சிலர் முறைகேடாக அவர்களது பெயரில் மாற்றி எழுதிக் கொண்டதும், அதனால் பூர்வீக சொத்தை மீட்டு தர கோரி பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தர்ணாவில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார், கலெக்டரிடம் மனு கொடுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்ட முருகேசன், தனது தந்தையுடன் சென்று கலெக்டரை சந்தித்து மனு அளித்து விட்டு சென்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்