இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து ரூ.3 லட்சம் திருட்டு
ராஜபாளையத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து ரூ.3 லட்சம் திருடி சென்றனர்.
ராஜபாளையம்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் ஊராட்சியில் தலையாரியாக பணியாற்றி வருபவர் மாரியப்பன். சேத்தூரை சேர்ந்த இவர், ராஜபாளையத்தில் ஒரு வங்கியில் ரூ.3½ லட்சம் கடன் வாங்கி இருந்தார். அதனை இரண்டாக பிரித்து, ஒரு பையில் ரூ.3 லட்சத்தையும், மற்றொரு பையில் ரூ.50 ஆயிரம் என தனித்தனியாக வைத்து, அவற்றை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்திருந்தார். இதையடுத்து அவர், தென்காசி சாலையில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, எதிரே உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது மர்ம நபர்கள், பின்ெதாடர்ந்து வந்து பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.
மாரியப்பன் திரும்ப வந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பெட்டியை சோதனை செய்த போது அதில் ரூ.3 லட்சம் இருந்த பையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. ரூ.50 ஆயிரம் தப்பியது.
இதுகுறித்து மாரியப்பன், ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகே உள்ள பகுதியில் ெபாருத்தி இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் உதவியுடன், கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.