பள்ளிக்கு செல்ல பாதை இல்லை என்று கூறி 3-ம் வகுப்பு மாணவன் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்

சேந்தன்குடி கிராமத்தில் பள்ளிக்கு செல்ல பாதை இல்லை என்று கூறி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு 3-ம் வகுப்பு மாணவன் தனது குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-05-02 18:36 GMT
கீரமங்கலம்:
காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் இனியவன் (வயது 8). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான். மாணவர் வீடு அன்னதான காவேரி கால்வாய் கரைக்கு தென்பக்கம் இருப்பதால் கரை சீரமைக்கப்பட்ட நிலையில் கால்வாய்க்குள் இறங்கி ஏறி பள்ளிக்கு செல்ல முடியாத நிலை இருப்பதாக கூறி கடந்த மாதம் பள்ளிக்கு விடுப்பு கேட்டு விண்ணப்பம் செய்திருந்தான். 
அதே போல அவனது பெற்றோரும் சாலை வசதி கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்திருந்தனர். ஆனால் இதுவரை சாலை வசதி கிடைக்காத நிலையில் நேற்று காலை மாணவன் இனியவன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சரிடம் கோரிக்கை
நீண்ட நேரமாகியும் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் அதே பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு சென்ற போது சாலையில் மாணவன் தனது குடும்பத்தினருடன் பதாகையுடன் அமர்ந்திருப்பதை பார்த்த அமைச்சர் மெய்யநாதன் அவர்களின் கோரிக்கையை கேட்டார். கால்வாய் சீரமைக்கப்பட்டதால் வீட்டிற்கு செல்ல பாதை இல்லை. அதனால் மாணவன் பள்ளிக்கு செல்ல முடிய வில்லை, விவசாய விளை பொருட்களையும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.
பலமுறை மனு கொடுத்தும் பயனில்லை என்றனர். உடனே அருகில் நின்ற வருவாய்த்துறை அதிகாரிகளை அழைத்து தனி நபர் பட்டா நிலம் இல்லாமல் அரசு பொது நிலமாக இருந்தால் உடனே பாதை அமைத்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி அன்னதான காவேரி கால்வாய் அளவீடு செய்யப்பட உள்ளது. அளவீடு செய்த பிறகு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அமைச்சர் மெய்யநாதன் உறுதி அளித்ததையடுத்து மாணவன் குடும்பத்தினர் போராட்டத்தை முடித்துக் கொண்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்