திருப்பூர் மாநகரில் தினமும் 1000 டன் குப்பைகளை அள்ள திட்டம்
திருப்பூர் மாநகரில் தினமும் 1000 டன் குப்பைகளை அள்ள திட்டம் தயார் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர், மே.3-
திருப்பூர் மாநகரில் தினமும் 1,000 டன் குப்பைகளை அள்ள திட்டம் தயார் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாநகராட்சி நடவடிக்கை
திருப்பூர் மாநகராட்சி 60 வார்டுகளை கொண்டது. மாநகர பகுதியில் 10 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இதுதவிர தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பூர் மாநகருக்கு வேலை நிமித்தமாக வந்து செல்கிறார்கள். இங்கு சராசரியாக நாளொன்றுக்கு 600 டன் குப்பை சேகரமாவது கண்டறியப்பட்டுள்ளது. குப்பைகளை அகற்றுவதற்கான பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் மண்டலம் வாரியாக சென்று குப்பை அள்ளும் பணியை கண்காணித்து வருகிறார்கள். குப்பைகளை கைவிடப்பட்ட பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர். குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருகிறார்கள்.
1000 டன் குப்பை அகற்ற நடவடிக்கை
3-வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டுகளில் குப்பை அதிகம் தேங்குவது கண்டறியப்பட்டு ஒரே நாளில் 170 டன் கூடுதலாக அகற்றப்பட்டது. நாளொன்றுக்கு 1,000 டன் குப்பையை அகற்றுவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
4 மண்டலங்களுக்கும் தலா ஒரு பொக்லைன் எந்திரம் வழங்கப்பட்டு குப்பை அள்ளும் பணிக்கு ஈடுபடுத்தப்படுகிறது. சோதனை முறையாக மாநகராட்சி பகுதியில் தினமும் சேகரமாகும் குப்பைகளை அகற்றி எத்தனை டன் அகற்றப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.