திருவாரூர் அருங்காட்சியகம் இடமாற்றப்படுமா
இடவசதியின்றி செயல்படும் திருவாரூர் அருங்காட்சியகம் இடமாற்றப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
திருவாரூர்;
இடவசதியின்றி செயல்படும் திருவாரூர் அருங்காட்சியகம் இடமாற்றப்படுமா என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம் என்பது கலாசாரம், கலை, அறிவியல் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அரிய வகை பொருட்களை பாதுகாக்கவும், வரலாற்றை அடுத்தடுத்து வரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் நோக்கிலும் அமைக்கப்படும் இடமாகும். இங்கு காட்சிக்கு வைக்கப்படும் அரிய பொருட்களை பற்றி தெரிந்து கொண்டால், அதன் வரலாற்றையும், முன்னோரின் வாழ்வியல் சூழலையும் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 20 மாவட்ட தலைமை இடங்களில் அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.
இடவசதி இல்லை
திருவாரூரில் அருங்காட்சியகம் கடந்த 1998-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்துக்கு திருவாரூர் தியாகராஜர் கோவில் மேற்கு கோபுர வாசலில் உள்ள மண்டபத்தில் இடம் ஒதுக்கப்பட்டு, இயங்கி வருகிறது.
இந்த மண்டபத்தின் பாதி இடம் கோவில் அலுவலக பயன்பாட்டில் உள்ளது. இதனால் அருங்காட்சியகம் போதிய இடவசதி இல்லாமல், கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள், நாணயங்கள், வாத்திய கருவிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு
கடந்த 2012-ம் ஆண்டு திருவாரூர் அருகே கண்டிரமாணிக்கம் என்ற கிராமத்தில் பள்ளம் தோண்டியபோது கல்லால் ஆன புத்தர் சிலை கிடைத்தது. இந்த கற்சிலை அருங்காட்சியகத்துக்குள் இடவசதி இல்லாத காரணத்தால், வாசலில் வைக்கப்பட்டு உள்ளது. பழங்கால மக்கள் பயன்படுத்திய கோடரி, வெட்டும் கத்தி, அரிவாள், கற்கருவிகள் உள்ளிட்ட பல பொருட்களை திருவாரூர் அருங்காட்சியகத்தில் காணலாம். அதேபோல பழமையான சிலைகள், படிமங்கள் ஆகியவை தனித்தனி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் மேலும் பல்வேறு பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த போதிய இடவசதி இல்லை. மேலும் பாதுகாப்பு தன்மையை கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் நிலத்துக்கடியில் கண்டெடுக்கப்படும் சிலைகள் போன்றவை சென்னையில் உள்ள தலைமை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
300-க்கும் மேற்பட்ட சிலைகள்
கடந்த 20 ஆண்டுகளில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பழமை வாய்ந்த கோவில்களின் வரலாறு, கண்டெடுக்கப்படும் சிலைகளின் வரலாற்று தவல்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகங்கள் மூலம் மக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கான போதிய இடவசதி இல்லாத வகையில் திருவாரூர் அருங்காட்சியகம் அமைந்து உள்ளது.
கோவில் வளாகத்தில் உள்ளதால் பல அரிய பொருட்கள் காட்சிப்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்படும் சிலைகள், பழங்கால பொருட்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் வகையிலும், அனைத்து தரப்பினரும் வந்து செல்லும் வகையிலும், இடவசதியுடன் கூடிய கட்டிடத்துக்கு திருவாரூர் அருங்காட்சியகத்தை இடமாற்ற வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.