பழுதடைந்த சுற்றுச்சுவரை புதுப்பிக்க வேண்டும்
வேட்டைக்காரன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த சுற்றுச்சுவரை இடித்து அகற்றி புதுப்பிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனைமலை,
அரசு பள்ளி
ஆனைமலையை அடுத்துள்ள வேட்டைக்காரன்புதூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 800 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், காளியாபுரம், டாப்சிலிப் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
பள்ளியில் சுற்றுச்சுவர் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஒருபகுதி சுற்றுச்சுவர் களிமண்ணால் கட்டப்பட்டு உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
மேலும் சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி தேங்கி உள்ளதால் சுற்றுச்சுவர் மேலும் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.
பழுதடைந்த சுற்றுச்சுவர்
இதனால் ஆபத்தான சுற்றுச்சுவரால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, அரசு பள்ளிகளில் பழைய கட்டிடங்களின் நிலை குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது,
கடந்த சில மாதங்களுக்கு முன் நெல்லையில் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்த விபத்தில் 3 மாணவர்கள் இறந்தனர். அதன்பின் அதிகாரிகள் வட்டார வாரியாக ஆய்வு மேற்கொண்டனர். வேட்டைக்காரன் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த சுற்றுச்சுவரை முழுமையாக இடித்து புதிதாக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்.
அப்போது தான் உறுதி தன்மை இருப்பதோடு, மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வர முடியும். மேலும் ஒருபகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து உள்ளதால் மதுபிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.