வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி
காங்கயம் வீரணம்பாளையத்தில் குடியிருப்பவர்களின் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கு பட்டா வழங்கி உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கலெக்டரிடம் முறையிட்டனர்.
திருப்பூர்
காங்கயம் வீரணம்பாளையத்தில் குடியிருப்பவர்களின் வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்களுக்கு பட்டா வழங்கி உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கலெக்டரிடம் முறையிட்டனர்.
இலவச வீட்டுமனைப்பட்டா
திருப்பூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலமாக தெரிவித்தனர். தாராபுரம் கருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சம்மன் புதூரில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கில் கடந்த 2004-ம் ஆண்டு இலவச வீட்டுனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை அங்கு பயனாளிகள் யாரும் குடியேறவில்லை.
கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெஸ்ட் நகர், பாலசுப்பிரமணி நகர், கவுண்டச்சிபுதூர் ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வாடகை வீட்டில் குடிசையில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட நத்தம் புறம்போக்கு நிலத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினால் பயன்பெறுவார்கள்’ என்று கூறியுள்ளனர்.
வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்
காங்கயம் தாலுகா வீரணம்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 42 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்யும் நாங்கள் வீடு கட்டுவதற்கு இடவசதியில்லாமல் இருந்தோம். இந்த நிலையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி தலைவர் மூலமாக நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீட்டுக்கு வீட்டு வரி ரசீது பெற்று மின் இணைப்புகள் பெற்றும் உள்ளோம். குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிராம நிர்வாக அதிகாரி வந்து, சம்பந்தப்பட்ட இடம் குட்டை என்ற பெயரில் உள்ளது. இதனால் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். எங்கள் நிலத்தை ஆய்வு செய்து, வகைமாற்றம் செய்து நாங்கள் அங்கேயே குடியிருக்க வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.