மும்பையில் இருந்து துர்காபூர் சென்ற- விமானம் தரையிறங்கும்போது குலுங்கியதில் 15 பேர் காயம்
மும்பையில் இருந்து துர்காபூர் சென்ற விமானம் தரையிறங்கும்போது குலுங்கியதில் 15 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் இருந்து துர்காபூர் சென்ற விமானம் தரையிறங்கும்போது குலுங்கியதில் 15 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
விமானத்தில் பரபரப்பு
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று மும்பையில் இருந்து மேற்கு வங்காளத்தின் துர்காபூர் சென்றது. இந்த விமானம் துர்காபூரில் தரையிறங்கும்போது காற்றின் திடீர் திசைமாற்றத்தால் பயங்கரமாக குலுங்கியது.
இதில் விமானத்தில் இருந்த 12 பயணிகள் மற்றும் 3 ஊழியர்கள் என 15 பேர் காயமடைந்தனர். அத்துடன் விமானத்தில் வைக்கப்பட்டிருந்த பயணிகளின் உடைமைகளும் சிதறி விழுந்தன.
இந்த சம்பவத்தால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளை தங்கள் இருக்கைகளில் அமருமாறும், சீட் பெல்டை அணியுமாறும் விமான ஊழியர்கள் தொடர்ந்து அறிவுறுத்தினர்.
விசாரணைக்குழு அமைப்பு
பின்னர் துர்காபூர் விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, காயமடைந்தவர்களுக்கு முதலுதவி உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
அதில் 8 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் குழு ஒன்றை அமைத்து உள்ளது.
ஜோதிராதித்ய சிந்தியா
இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா தனது டுவிட்டர் தளத்தில், ‘துர்காபூரில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது பயங்கரமாக குலுங்கியதில் துரதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டு இருக்கிறது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் அதிகமான தீவிரத்தன்மையுடன் எடுத்து விசாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள மத்திய மந்திரி, விசாரணை முடிவில் சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் தெரியவரும் என்றும் தெரிவித்து உள்ளார்.