1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விடுமுறை அளிக்க வேண்டும்- டாக்டர் அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விடுமுறை அளிக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Update: 2022-05-02 18:45 GMT
மயிலாடுதுறை:-

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விடுமுறை அளிக்க வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார். 

அன்புமணி ராமதாஸ் பேட்டி

மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:- 
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான காவிரி டெல்டாவில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இன்னும் ஆழ்துளை கிணறுகளை அமைக்க முயற்சி செய்வது சட்டத்துக்கு எதிரானது. தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து எண்ணெய் கிணறுகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வரவேற்கத்தக்கது

பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கமாட்டோம் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் பா.ம.க. எதிர்த்து போராட்டம் நடத்தும்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மருத்துவக்கல்வியை வணிகமயமாக்க கூடாது என்று நீட் தேர்வை கொண்டு வந்ததாக கூறுகின்றனர். ஆனால் பல நீட் பயிற்சி மையங்கள் தொடங்கி ரூ.1 லட்சம் கோடி வரை வணிகம் நடந்துள்ளது. இதனை பயிற்சி என்று சொல்கின்றனர். பின்னர் பிளஸ்-2 மதிப்பெண் எதற்கு? எனவே தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை. 

விடுமுறை

தற்போது கோடை வெயில ்தாக்கம் அதிகமாக இருப்பதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து விடுமுறை அளிக்க வேண்டும். 10-வது முதல் பிளஸ்-2 வரை பொதுத்தேர்வுகளை நடத்தலாம். 
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற்று தருவதற்கு முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். பா.ம.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கிற்குத்தான். 
இவ்வாறு அவர் கூறினார். 
அப்போது பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்