சாலையோர மரத்தில் மோதிய கார்; 2 பேர் படுகாயம்

வேடசந்தூர் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-05-02 16:32 GMT
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நவாமரத்துபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 33). இவரும், அதே ஊரை சேர்ந்த சண்முகம் (42) என்பவரும் நேற்று காலை காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை மாரிமுத்து ஓட்டினார். 
வேடசந்தூர் அருகே சாலையூர் நால்ரோடு பகுதியில் உள்ள வளைவில் கார் வந்தது. அப்போது  திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. ஒருகட்டத்தில் அந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரில் வந்த மாரிமுத்து, சண்முகம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் காரின் இடிபாடுகளில் சிக்கிய மாரிமுத்து, சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்