கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 210 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை சூட்டவேண்டும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், மாவட்டத்தில் சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அழகுராணி தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.