மின் தடை ஏற்பட்டதால் ஊழியர்கள் மீது தாக்குதல்
குடியாத்தத்தில் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர் மின் ஊழியர்களை தாக்கினர். இதில் 6 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக வழக்கறிஞர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்
குடியாத்தத்தில் மின்தடை ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த சிலர் மின் ஊழியர்களை தாக்கினர். இதில் 6 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக வழக்கறிஞர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மின் தடை
குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது சில இடங்களில் மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் சாலையின் குறுக்கே விழுந்தது. பல இடங்களில் மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் குடியாத்தம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.
மின்வாரிய ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்களின் மீது விழுந்த மரக் கிளைகளை அகற்றி படிப்படியாக மின் வினியோகம் வழங்கினார்கள். கள்ளூர், பாக்கம், சீவூர் உள்ளிட்ட பகுதிகளில் பாக்கம் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள் பார்வையிட்டு மரக்கிளைகளை அப்புறப்படுத்தி படிப்படியாக மின்சாரம் வழங்கினார்கள். இருப்பினும் சற்று நேரத்தில் லட்சுமணாபுரம், கள்ளூர் பகுதிகளில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது.
ஊழியர்கள் மீது தாக்குதல்
இரவு 11 மணி அளவில் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஊழியர்கள், மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். அப்போது கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மதன்குமார் உள்ளிட்ட சிலர் பல மணி நேரம் மின்தடை ஏற்படுத்தியது ஏன் என மின்வாரிய அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் (வயது 57), போர்மேன் ஆர்.ரவிச்சந்திரன் (60), வயர்மேன்கள் ஏ.பிரகாசம் (46), டி.என். பெருமாள் (55), மின் பாதை ஆய்வாளர் சேகர் (50), ஊழியர் ராஜ்குமார் (25) ஆகிய 6 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கேள்விப்பட்டதும் குடியாத்தம் கோட்டத்தில் உள்ள மின்வாரிய ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வழக்கறிஞர் உள்பட 2 பேர் கைது
குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன், மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி உள்பட மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.
இதேபோல் வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் த.வேலழகன் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்து சிகிச்சை பெறும் மின் ஊழியர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். நகர செயலாளர் ஜே.கே.என்பழனி, ஒன்றிய செயலாளர் டி.சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்வாரிய ஊழியர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் மதன் குமார் உள்பட 7 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மதன்குமார் (36), வினோத்குமார் (32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.
உள்ளிருப்பு போராட்டம்
குடியாத்தத்தில் மின்வாரிய இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊழியர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் குடியாத்தம் செருவங்கி பகுதியில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்வாரிய ஊழியர் சி.ஐ.டி.யு. தொழிற் சங்க மாநில செயலாளர் ஜோதி, திட்ட செயலாளர் சிவசீலன், கோட்ட செயலாளர் தினகரன், கோட்டத் தலைவர் சோமு, மின்வாரிய ஊழியர் ஐக்கிய சங்கத்தின் பழனி, பொறியாளர் சங்கத்தின் சீனிவாசன், அண்ணா தொழிற்சங்கத்தின் சீனிவாசன், தொ.மு.ச. முருகன் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உள்ளிட்ட போலீசார் சென்று, தாக்குதல் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற உள்ளிருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.