குடியிருக்க மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு
போளூர் தாலுகா மொடையூர் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருக்க மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
திருவண்ணாமலை
போளூர் தாலுகா மொடையூர் பெரிய ஏரி ஆக்கிரமிப்புகள் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடியிருக்க மாற்று இடம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாதி சான்று, வீட்டுமனை பட்டா, வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.
மேலும் கடந்த கூட்டங்களில் பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களிடம் கலெக்டர் ஆய்வு செய்தார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரதாப், உதவி கலெக்டர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வீட்டு வரி ரசீது
செங்கம் தாலுகா கொட்டக்குளம் ஆதிதிராவிடர் புதிய காலனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் 2004-ம் ஆண்டு 35 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அந்த இலவச வீட்டு மனையில் தற்போது அனைவரும் வீடு கட்டி வசித்து வருகிறோம். மின்சாரம் வசதி, தெரு சாலை அமைக்கவும், குடிநீர் வசதி, வீட்டு வரி ரசீது பெறவும் கிராம ஊராட்சி செயலாளர் வீட்டுவரி ரசீது தர மறுக்கிறார்.
மின்சாரம் பெற கிராம நிர்வாக அலுவலர் சான்று தேவைப்படுகிறது. எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை வட்ட மற்றும் கிராம கணக்கில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கணினியில் பதிவேற்றம்
ஆரணி தாலுகா பெரிய அய்யம்பாளையம் மண்டபத் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் தெருவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். எங்களுக்கு 1980-ம் ஆண்டு மேற்கு ஆரணி தாசில்தாரால் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பட்டா கணினி பதிவு ஏற்றம் செய்யப்படவில்லை.
இது குறித்துக் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தாரை அணுகினால் வரைபடத்தை தேடி எடுத்து வந்தால் கணினி பதிவேற்றம் செய்யலாம், என்று கூறுகின்றனர்.
நாங்கள் வேலூர் மற்றும் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தை அணுகிய போது இது சம்பந்தமான எந்த ஆவணமும் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே எங்களது பட்டாவை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குடியிருக்க மாற்று இடம்
போளூர் தாலுகா மொடையூர் கிராம மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பெரிய ஏரிக்கு அருகில் வீடு கட்டி 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூலி வேலை செய்து வசித்து வருகிறோம்.
நாங்கள் அங்கு வசிப்பதால் கிராமத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்போ, இடையூரோ இல்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நாங்கள் பெரிய ஏரியை ஆக்கிரமித்து வீடு கட்டி உள்ளதாகவும், குறைவான கால அவகாசத்தில் குடியிருப்பை அகற்றுமாறும் நோட்டீசு அளித்துள்ளனர்.
நாங்கள் வாழ்ந்து வரும் நிலையில் திடீரெனக் குடியிருப்பை அகற்ற சொல்வது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. எனவே நாங்கள் குடியிருப்பை அகற்ற போதிய அவகாசமும், குடியிருக்க மாற்று இடமும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.