கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண் பலி

கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தார்.

Update: 2022-05-01 23:55 GMT
மணப்பாறை:

கார் கவிழ்ந்தது
மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவர் மரத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படும் நிலையில், அவர் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த பிருந்தா(வயது 25), அவரது கணவர் பிரகாஷ்(29), கண்ணுடையான்பட்டியை சேர்ந்த தனலெட்சுமி(25), அழகம்மாள்(70), ஷாலினி(20), மணிகண்டன்(12), சந்தியா(15), சர்மிளா(17), பிரேமா(18), போதும்பொண்ணு(35), மெய்யாத்தாள்(45), செந்தில்குமார்(42) ஆகிய 12 பேர் நேற்று இரவு ஒரு காரில் புறப்பட்டுச் சென்றனர்.
பெண் சாவு
திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறைைய அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்ததில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மறுபுற சாலைக்கு சென்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பிருந்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 11 பேரும் படுகாயமடைந்து மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சாலையில் கிடந்த கற்கள், மணல் மற்றும் காரின் உதிரி பாகங்களை அந்த வழியாக வந்த வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில், பொதுமக்கள் உதவியுடன் போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்