தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-05-01 21:31 GMT
வேகத்தடை அமைக்கப்படுமா?
 நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியில் இருந்து அனந்தன்நகர் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து புன்னைநகர் செல்லும் பிரிவு சாலை ஒன்று செல்கிறது. இந்த பகுதியில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், புன்னைநகரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் அனந்தநகர் சாலையில் திரும்பும்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி புன்னைநகர் பிரிவு சாலை பகுதியில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                          -ஆ.ஆன்டணி சதீஷ், கீழ் ஆசாரிபள்ளம்.
பஸ்சை இயக்க வேண்டும்
திங்கள்நகரில் இருந்து இரணியல் வழியாக குருந்தன்கோடு, ஆளூர் மார்க்கமாக நாகர்கோவிலுக்கு 12 ‘எச்’ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது, இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், குருந்தன்கோடு, ஆளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நாகர்கோவிலுக்கு வரும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மாணவர்கள், தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                             -ஜான் ஆன்டணி, தெக்கன்திருவிளை.
சுகாதார சீர்கேடு
குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட குழந்தைஏசு நகர் செல்லும் சாலையில் அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தின் அருகில் சிலர் தொடர்ந்து இறைச்சி கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதர சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அங்கன்வாடி மையம் அருகில் கிடக்கும் இறைச்சி கழிவுகளை அகற்றுவதுடன், அங்கு கொட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.                                                
 -அபுதாஹிர், குளச்சல்.
விபத்து அபாயம்
குலசேகரத்தில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் சாலையில் குலசேகரம் கால்நடை ஆஸ்பத்திரியும், அதன் அருகில் பழமையான மாமரம் ஒன்றும் நிற்கிறது. இந்த மாமரத்தின் ஒரு பகுதியில் உள்ள கிளையில் இலைகள் உதிர்ந்து பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் கிளை முறிந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமகக்கள் மீது விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி பட்டுப்போன கிளைகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                 -சி.அசோக் குமார், குலசேகரம்.
மின்கம்பியில் படர்ந்த கொடிகள்
வெள்ளமடம் அருகே கரையான்குழி பகுதியில் ஒரு குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் உள்ள ஒரு மின்கம்பத்தில் செடிகொடிகள் படர்ந்து மின்கம்பியே தெரியாத நிலையில் புதர் மண்டி கிடக்கிறது. இதனால், அந்த இடம் விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாற வாய்ப்புள்ளது. எனவே, மின்கம்பத்தில் படர்ந்துள்ள கொடிகளை அகற்றுதுடன், கம்பத்தில் மின்விளக்கு பொருத்தி எரியவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                          -தங்கப்பன், புரவச்சேரி.
வடிகால் ஓடை தேவை
அருவிக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு தைவிளாகம் பகுதியில் இருந்து பரளியாறு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல நாட்களாகியும் தண்ணீர் வடியாதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால் ஓடை அமைத்து மழைநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
                                           -அர்ஜூன், மாத்தூர்.

மேலும் செய்திகள்