சேலையில் தீப்பிடித்து பெண் சாவு
மேலநீலிதநல்லூர் அருகே சேலையில் தீப்பிடித்து பெண் இறந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
பனவடலிசத்திரம்:
மேலநீலிதநல்லூர் அருகே சேலையில் தீப்பிடித்து பெண் இறந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
சமையல் செய்யும்போது...
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் அருகே உள்ள மருதங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சம்பவத்தன்று கவிதா வீட்டில் சமையல் செய்வதற்காக மண்எண்ணெய் அடுப்பை பற்ற வைத்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து உடலில் பரவியது. இதைப் பார்த்த செல்வராஜ் அதிர்ச்சி அடைந்து மனைவியை காப்பாற்றுவதற்காக தீயை அணைக்க முயன்றார். அப்போது அவர் மீதும் தீப்பற்றியது.
பரிதாப சாவு
இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். படுகாயம் அடைந்த 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். செல்வராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.